முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்: மியான்மரில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

யாங்கூன் : மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 

மேலும் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் ராணுவம் கைது செய்தது. ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 

ராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகிறார்கள். ஆனால் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தி வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் பொது மக்கள் போராட்டம் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில் மியான்மரில் ஒரே நாளில் 82 பேரை ராணுவம் சுட்டு கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாகோ நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்கள் நடத்தினர். அவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது. இதில் ஒரே நாளில் 82 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த மாதம் 14-ந் தேதி யான்கூன் நகரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு ஒரே நாளில் அதிகபட்சமாக பாகோ நகரில் 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே மியான்மரில் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 46 பேர் சிறுவர்கள் என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது. 

இதற்கிடையே ஷான் மாநிலத்தின் நாங்கமோன் என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி படை உள்ளிட்ட இனக்குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து