முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா கட்டுப்பாடு காலத்தில் குடும்பத்திற்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா கட்டுப்பாடு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலை கட்டுப்படுத்த முடியாத வேகத்தை எட்டியுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தேர்தலுக்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், குடிப்பகங்கள், பெரிய கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றை மூட ஆணையிடப்பட்டது. 

3-ம் கட்டமாக நாளை முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதி, கடைகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வணிகம் உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவாது என்பது தான் எதார்த்தம். முதலில் இரு வாரங்களுக்கு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்தி, பின்னர் கூடுதலாக இன்னொரு வாரம் ஊரடங்கை செயல்படுத்துவதன் மூலம், கொரோனா வைரஸ் பரவலை நிச்சயமாக கட்டுப்படுத்தி விட முடியும்.  ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதால் ஏழை நடுத்தர மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்புகளை அரசு தான் ஈடுகட்ட வேண்டும்.  அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு ரூ.5,000 வீதம் வாழ்வாதார உதவியும், இலவச உணவு தானியங்களும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இதற்கான செலவில் சரி பாதியை மத்திய அரசிடம் போராடிப் பெறவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மற்றொருபுறம் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அம்மாவட்டங்களுக்கு போதுமான ஆக்சிஜனை வழங்கி நோயாளிகளைக் காப்பாற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து