முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ராஜ்பவனில் எளிய முறையில் விழா: தமிழக முதல்வராக ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார்

வியாழக்கிழமை, 6 மே 2021      தமிழகம்
Image Unavailable

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் இன்று பதவி ஏற்கிறார். இதற்கான விழா, கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் நடத்தப்படுகிறது.

2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் 159 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறது. முன்னதாக நடந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலினை சட்டமன்ற தி.மு.க. தலைவராக அனைவரும் ஒரு மனதாக தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர்.

அதை தொடர்ந்து, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்க நேற்று முன்தினம் காலை 10.25 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு ஸ்டாலின் சென்றார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் சென்றனர்.  கவர்னரை சந்தித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை போர்த்தியதோடு, பூங்கொத்தும் கொடுத்தார். அப்போது அவரிடம், ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆதரவு தீர்மானக் கடிதத்தையும் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து கவர்னரும், ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர், கவர்னரிடம் ஸ்டாலின் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது.

இதற்கிடையே ஆட்சி அமைப்பதற்கு கவர்னர் பன்வாரிலால் அழைப்பு விடுத்தார். கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பட்டீல் அதற்கான கடிதத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தார். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவைக்கான பட்டியல், கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. இந்தப் பட்டியல் தலைமைச் செயலாளர் மூலம் பொதுத்துறைக்கு அனுப்பப்படும். பொதுத்துறை மூலம் முதல்வர் மற்றும் ஒவ்வொரு அமைச்சருக்கும் அரசுத் தரப்பில் இருந்து தரப்பட வேண்டிய கார், தனிப் பாதுகாவலர் (பி.எஸ்.ஓ.), தலைமைச் செயலகத்தில் அலுவலக அறை ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதை எளிமையாக நடத்துவதாக ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன்படி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் இருந்து உறவினர்கள் உள்பட 200 பேர் மட்டுமே அந்த விழாவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.  தமிழ்நாடு அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கான அழைப்பிதழை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வழங்கியுள்ளார். சில எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உள்ள திறந்த வெளியில் அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக அனைவரும் காலை 8.30 மணிக்கே வந்து விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில், அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் ஆகியவற்றை செய்து வைக்கும்படி கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அழைப்பு விடுப்பார்.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சராக பெயர் சொல்லி மேடைக்கு கவர்னர் அழைப்பார். முதலில் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் மேடைக்கு வந்ததும், கவர்னர் தொடங்கும் வாசகத்தை அப்படியே அவர் படிப்பார். அதன்படி, மு.க.ஸ்டாலின் அந்த பிரமாணத்தை படித்து முடிப்பார். அதைத் தொடர்ந்து ரகசிய காப்புப் பிரமாணமும் அதே வகையில் செய்து வைக்கப்படும்.

அதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள அமைச்சர் அழைக்கப்படுவார். அந்த வகையில் ஒவ்வொரு அமைச்சராக வரிசையாக மேடைக்கு வந்து 2 உறுதி மொழி பிரமாணங்களை வாசித்து பதவி ஏற்பார்கள். அதைத் தொடர்ந்து அங்குள்ள கோப்பில் கையெழுத்திடுவார்கள். இந்த பதவியேற்பு நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. 

அதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அனைவருக்கும் தேநீர் விருந்தளிப்பார். அதில் பங்கேற்று விட்டு, முதல்வர் மற்றும் அமைச்சர்களாக அனைவரும், அவர்களுக்கென்று அளிக்கப்பட்ட கார் மற்றும் பாதுகாவலர்களுடன் தலைமை செயலகத்திற்கு செல்வார்கள். தலைமைச் செயலகத்தில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் மு.க.ஸ்டாலின் நேரடியாக அந்த அறைகளுக்குச் சென்று அமைச்சர்களை பொன்னாடை போர்த்தி வாழ்த்தி இருக்கையில் அமர செய்வார். முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஸ்டாலின் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து