முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்: ஒடிசா, மேற்குவங்கத்திற்கு தலா ரூ.500 கோடி ஒதுக்கீடு: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 28 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புவனேஸ்வர் : மேற்குவங்காளம், ஒடிசாவில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பயணம் செய்து ஆய்வு செய்தார்.

வங்க கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே கடந்த புதன்கிழமை கரை கடந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.  இதில் 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதே போல் ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார்.  இதற்காக விமானம் மூலம் பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்றடைந்தார். அங்கு புயல் பாதிப்பு மற்றும் சேத விவரங்கள் தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆய்வு நடத்தினார். 

அந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ஒடிசாவில் யாஸ் புயாலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார்.  ஒடிசாவையடுத்து மேற்கு வங்கத்திலும் புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி ஆய்வு செய்யவுள்ளதாகவும்,  புயல் பாதிப்பு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதன்பின் ஒடிசா மாநிலத்திற்கு 500 கோடி ரூபாய் உடனடி நிவாரண நிதியாகவும் மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 500 கோடி ரூபாய் உடனடி நிவாரண நிதியாகவும் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். மேலும், யாஸ் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து