முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க தி.மு.க. பாடுபடும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க தி.மு.க. அரசு பாடுபடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி, அலுவல் மொழியாகிட தி.மு.க. உறுதியுடன் பாடுபடும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்க்  கொடியைக் கையில் ஏந்தி 14 வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் மொழி - இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று, நம் தமிழ் மொழிக்கு இந்திய ஒன்றிய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததாகும்.    பரிதிமாற்கலைஞரில் தொடங்கி பல தமிழறிஞர்களும் 100 ஆண்டு காலமாக வலியுறுத்திய செம்மொழித் தகுதி, கலைஞரின்  பெருமுயற்சியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்தி அம்மையார், பிரதமர் பொறுப்பு வகித்த மன்மோகன் சிங் கலைஞரின் கோரிக்கையை ஏற்றனர். தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு 6-6-2004 அன்று வெளியானது. அதற்கான அரசாணை 12-10-2004 அன்று வெளியிடப்பட்டது.

  உலகின் மூத்த மொழியும், திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் மொழியும், இலக்கிய - இலக்கண வளங்கள் கொண்ட சிறப்பான மொழியும், பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் தன்னைத் தகவமைத்து கொண்டு, கல்வெட்டுக் காலம் முதல் கணினிக் காலம் வரை சிறப்புற்று விளங்கும் மொழியான அன்னைத் தமிழ்மொழிக்கு முத்தமிழறிஞர் சூட்டிய அணிகலனே, செம்மொழித் தகுதியாகும்.

அந்தத் தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க, தி.மு.க. அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி - அலுவல் மொழியாகிட உறுதியுடன் பாடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து