முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை: சென்னை ஐகோர்ட் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நாடு முழுவதும் கொரோனா மரணம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட் குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிவாரணங்களை அறிவித்திருக்கின்றன. இந்த சூழலில் இறப்புச் சான்றிதழில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் என்று குறிப்பிடாததால் பலருக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரணங்கள் மறுக்கப்பட்டுள்ளதாக கூறி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தன்னுடைய மனுவில், சக வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்று இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடாததால், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பத்தினருகும் அரசின் நிதியுதவி கிடைப்பது தடைப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடு முழுவதும் கொரோனா மரணம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருவதாக தெரிவித்தனர். 

மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாசிட்டிவ் என்ற சான்றிதழ் இல்லையென்றால், கொரோனா மரணம் என இறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்படுவதில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால் தான் எதிர்காலத்தில் தொற்று பரவலை குறைக்கவும், இது குறித்து ஆய்வு செய்யவும் முடியும் என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும் இறப்புகளை துல்லியமாக குறிப்பிடுவதன் மூலமாக நிவாரணம் வழங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதே சமயம் இணை நோய் உள்ளவர்கள் பலர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதால், கொரோனா காலத்தில் இணை நோயால் இறந்தவர்களின் சான்றிதழ்களை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து