முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.

தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையின் மூலமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது. முதலில் குறுவை சாகுபடியும், தொடர்ந்து சம்பா தாளடி நெல் பயிர் சாகுபடியும் செய்யப்படுகிறது. அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இருக்கும்பட்சத்தில் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். தற்சமயம் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதாலும், பருவ மழையை எதிர்நோக்கியும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக நேற்று காலை 10.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். இதற்காக மேல்மட்ட மதகு பகுதியில் மேடை அமைக்கப்பட்டு அங்கிருந்து மின் விசையை இயக்கி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்பு அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் மூலமாக பாசனத்திற்கான தண்ணீர் வெளியேற்றப்பட்டன. கால்வாயில் சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரை மலர்தூவி மு.க.ஸ்டாலின் வரவேற்று வணங்கினார்.

அணை வரலாற்றில் இந்த திட்டமிட்ட தேதியில் இதுவரை 17 முறைகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது 18-வது முறையாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஜூன் 12-ம்  தேதிக்கு முன்பு 10 முறையும், ஜூன் 12-ம்  தேதிக்கு பிறகு 60 முறையும் இதுவரையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்படும் தண்ணீர் திறப்பு அணை வரலாற்றில் 88-வது ஆண்டாகும். முதல்கட்டமாக நேற்று வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுகிறது. 

டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் கடைமடை வரை பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். நேற்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1, 170 அடியாகவும், அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக இருந்தது. 

மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு மாவட்டம் பாசூர் வரை காவிரி ஆற்றில் 7 கதவணைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி 7 தடுப்பணைகளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே கதவணைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.  மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். 

காவிரி டெல்டா விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும், நீர்ப்பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறைவைத்து பயன்படுத்தவும், நீர்வளத் துறை அலுவலர்களுடன் ஒத்துழைப்பு நல்கியும், வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களின் ஆலோசனைகளைப் பெற்று, செம்மை நெல் சாகுபடி உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்த பரப்பளவில் மிக அதிக அளவு மகசூல் பெற்று பயனடைய வேண்டுமென முதல்வர் கேட்டுக் கொண்டார். 

இந்நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, செந்தில் பாலாஜி, எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவர் மா.மதிவேந்தன், எம்.பி.க்கள் எஸ்.ஆர். பார்த்திபன், டாக்டர் பொன்.கௌதம்சிகாமணி, டாக்டர் செ. செந்தில் குமார் மற்றும்  ஏ.கே.பி. சின்ராஜ், அரசு தலைமைக் கொறடா  கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதிஸ்டாலின், இரா. இராஜேந்திரன் மற்றும் எஸ். சதாசிவம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், நீர்வளத் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து