முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய முகாமிற்கு தேர்வான தமிழக வீரர்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர்கள் சக்திவேல், சங்கரி தம்பதியின் மகன் மாரிஸ்வரன். மத்திய அரசின் ஹீலோ திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் மாரிஸ்வரன் சிறப்பாக விளையாடிய காரணத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 18ம் தேதி வரை பெங்களூரில் நடைபெற்ற இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வீரர் மாரிஸ்வரன் என்பது குறிப்பிடதக்கது. அந்த பயிற்சி முகாமிலும் மாரிஸ்வரன் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் இந்த ஆண்டு இறுதியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறவுள்ள ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாரிஸ்வரன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று ஹாக்கி பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

__________

4 ஆட்டங்களில் விளையாட தடை

வங்காளதேசத்தில் டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரில், முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிடெட் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணி கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன் பந்து வீசியபோது நடுவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக ஆத்திரத்தில் மூன்று ஸ்டம்புகளையும் பிடுங்கி வீசினார். இதேபோல் மழையால் ஆட்டத்தை நிறுத்த நடுவர்கள் எடுத்த முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்த ஷாகிப், கோபத்தில் ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.

பின்னர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார் ஷாகிப். 'மூத்த வீரரான நான் அதுபோல நடந்து கொண்டிருக்கக் கூடாது. என் தவறுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று மீண்டும் நடந்து கொள்ளமாட்டேன்' என ஷாகிப் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கிரிக்கெட் நிர்வாகம், டாக்கா பிரீமியர் லீக்கில் 4 ஆட்டங்களில் விளையாட ஷாகிப் அல் ஹசனுக்கு தடை விதித்துள்ளது. 

__________

மருத்துவமனையில் டூ பிளசிஸ் 

அபுதாபியில் நடந்து வரும் பி.எஸ்.எல் தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின. இந்தப் போட்டியின் 7-வது ஓவரில் டேவிட் மில்லர் அடித்து ஆடினார். இதனால் பந்து பவுண்டரியை நோக்கிச் சென்றது. குவெட்டா அணியில் இடம்பெற்ற தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டு பிளெசிஸ் அதனை தடுக்க ஓடினார். 

அப்போது சக வீரரான முகமது ஹஸ்னைன் என்பவரது காலில் அவரது தலை மோதியது. இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அவருக்கு அணி மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். இதையடுத்து, டு பிளசிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன. டு பிளசிசுக்கு பதிலாக போட்டியில் அயூப் விளையாடுகிறார்.

____________

பயிற்சி ஆட்டத்தில் பந்த் சதம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குத் தயாராகி வரும் இந்திய அணி வெள்ளிக்கிழமை முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியே இரண்டாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 2-ம் நாள் ஆட்டம் குறித்து பிசிசிஐ சுட்டுரையில் பதிவிட்டுள்ளது. அதன்படி, ஷுப்மன் கில் 135 பந்துகளில் 85 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கத்தைத் தந்திருக்கிறார். 

அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த் அதிரடி காட்டி 94 பந்துகளில் 121 ரன்கள் விளாசியுள்ளார். பந்துவீச்சில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் களமிறங்கலாம் என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இஷாந்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

__________

மே.இ. தீவுகள் அணி படுதோல்வி

மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 97 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி குயின்டன் டி காக்கின் அட்டகாசமான சதத்தால் 322 ரன்கள் குவித்தது. 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் திணறல் நிலையில் இருந்தது.

3-வது நாள் ஆட்டத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் சதமடித்த டி காக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து