முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் ஆய்வு செய்யும் குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுகிறதா என ஆய்வு செய்ய தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், மேகதாது அருகே அணை கட்டுவதற்கான நடவடிக்கையில் கர்நாடக அரசு ஈடுபட்டிருப்பதாக சில விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியிருந்தது குறித்து பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின. மேலும், அணை கட்டுவதால் 5,252 ஹெக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், வன விலங்குகள் சரணாலயத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் செய்திகள் வெளிவந்தன.

இதன் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இது குறித்து விசாரணை நடத்தியது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணிகள் நடைபெறுகிறதா என்பதையும், அணைக் கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மூத்த அலுவலர், காவிரி நீர் மேலாண்மை ஆணைய மூத்த அலுவலர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இதனிடையே தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக அரசு சார்பில் ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டம் நடத்தி இது குறித்து மறு பரிசீலனை மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுபரிசீலனை மனு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்நாடக அரசு சார்பில், மேகதாது பகுதியில் இதுவரை எந்த அணை கட்டும் பணிகளையும் துவங்கவில்லை என்றும், அணை கட்டுவதற்கான அனுமதி கேட்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தாக்கல் செய்த மனுவானது தற்போது வரை நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மேகதாது பகுதிக்குச் செல்லும் ஒரு சாலை பழுதடைந்து இருப்பதால், அந்த சாலை அமைப்பதற்காக கட்டுமான பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், அதனை சிலர் திரித்து செய்தியாக வெளியிட்டிருப்பதாகவும் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வாதங்களை ஏற்றுக் கொண்டு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வு குழுவை கலைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் முறையான அனுமதி இல்லாமல் மேகதாது பகுதியில் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து