விரைவில் மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும்: எடியூரப்பா பிடிவாதம்

Edyurappa 2021 07 13 0

Source: provided

பெங்களூரு: தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலம் குறித்தும் நான் பேச விரும்பவில்லை. விரைவில் மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார். 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்த சூழ்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடக அரசின்  மேகதாது திட்டத்திற்கு இதில் தொடர்புடைய மத்திய  அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. ஆனால் கர்நாடக உள்துறை அமைச்சர்  பசவராஜ் பொம்மை நாங்கள் மேகதாதுவில் அணை கட்டுவதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளோம்; குடிநீர் முக்கிய தேவையாக இருப்பதால் அணை கட்ட கர்நாடகாவுக்கு  உரிமை உண்டு.அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். கர்நாடகாவுக்கு இந்திய அரசு நீதி வழங்கும் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

இந்த நிலையில்  கர்நாடகாவில் பல்வேறு  குடிநீர் திட்டங்களை  தொடங்கி வைப்பதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்  நேற்று பெங்களூரு வந்தார். அவரை வரவேற்ற கர்நாடக முதல்வர்  எடியூரப்பா, அவருடன் ஆலோசனை மேற்கொண்டார்.  மத்திய அமைச்சர் செகாவத்துடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ்  பொம்மை, நீர்வளத்துறை அமைச்சர் மாதுசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.  

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் போது, கர்நாடகா சார்பில் மேகதாது அணை திட்டத்திற்கு விரைவில்  ஒப்புதல் அளிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.  மத்திய அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு கர்நாடக முதல்வர்  எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலம் குறித்தும் நான் பேச விரும்பவில்லை. மத்திய அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம். விரைவில் மேக தாது அணை கட்டும் பணி தொடங்கப்படும் என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து