பெகாசஸ் சர்ச்சை எதிரொலி தொலைபேசியை மாற்றிய அதிபர்

Emmanuel 2021 07 24

Source: provided

பாரீஸ்: பெகாசஸ் சர்ச்சைகளுக்கிடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது தொலைபேசியையும், எண்ணையும் மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம், உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைப் போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் செய்தி உலக நாடுகளுக்கிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தங்கள் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுவதாகக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது தொலைபேசியையும், எண்ணையும் மாற்றியுள்ளார்.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், அதிபருக்கு நிறைய எண்கள் இருக்கின்றன. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் எண்ணை மாற்றி இருக்கிறார். அவர் யாரையும் வேவு பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பப் பிரிவான என்.எஸ்.ஓ. 2010-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி கண்டுபிடித்துள்ளது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையின்படி என்.எஸ்.ஓ. (NSO) என்ற வார்த்தைக்கு விரிவாக்கம் என்பது நிவ் கார்மி, ஷாலெவ் ஹூலியோ, ஓம்ரி லாவி ஆகியோரின் பெயரின் முதல் எழுத்தில் என்.எஸ்.ஓ. உருவாக்கப்பட்டது.

என்.எஸ்.ஓ. அமைப்பின் நோக்கம் என்பது புதிய நவீன தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து, சட்டம்- ஒழுங்கு மற்றும் உளவுத்துறைக்கு வழங்கி தொலைவில் இருந்தவாறே எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களின் செல்போனில் இருந்து தகவல்களைத் திருடுவதாகும். இந்த பெகாசஸ் மென்பொருளை இப்போது இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் பயன்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை இந்தியா, சவுதி நாடுகள் மறுத்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து