Idhayam Matrimony

டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

தூத்துக்குடி: தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார்.  தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் 132 ஏக்கர் பரப்பளவில் உள்ள சி.வ.குளம் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.53.40 கோடி மதிப்பில் பழைய பேருந்து நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளையும் ஆய்வு செய்து பணிகள் நிறைவு பெறும் காலம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

தூத்துக்குடி மாநகரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்தோம். உள்ளாட்சித் துறை சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடந்து வரும் பணிகளை பார்வையிட்டோம். முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தற்போது வரையிலும் முடிக்கப்படாமல் உள்ளது. அதை விரைவாக முடிக்கும் பொருட்டு பல்வேறு இடங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையில் இருந்து இடம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையப் பணிகள் தாமதமாகி விட்டன. தற்போது இடம் கிடைத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சட்டசபை தேர்தலில் தி.மு.க. அறிக்கையில், சில நகரங்கள் மாநகராட்சியாகவும், சில இடங்கள் நகராட்சியாகவும் தரம் உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் அறிவித்த பின்னர், சுழற்சி முறை இட ஒதுக்கீடு முறைப்படுத்தி, பருவ மழைக் காலம் முடிந்தவுடன் தேர்தல் அறிவிக்கப்பட்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

திருச்செந்தூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார். தூத்துக்குடியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான வரைபடம் வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

ஆய்வின்போது, அமைச்ர்கள் பெ. கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து