கேரளாவில் ஆன்லைன் மது விற்பனைக்கு அமோக வரவேற்பு

tasmasc-kerala-2021-08-18

Source: provided

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆன் லைன் மது விற்பனைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. 

கேரளாவில் அரசு மதுபான விற்பனை கழகம் (பெவ்கோ) மூலம் இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேரளா முழுவதும் 300-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் இயங்குகின்றன. கடந்த வருடம் கொரோனா பரவலை தொடர்ந்து மதுக்கடைகளில் கூட்டத்தை குறைக்க, ஆப்மூலம் மது விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதில் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில், அருகில் உள்ள கடைக்கு சென்று மது வாங்கும் வசதி செய்யப்பட்டது. ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தது. பின்னர் இந்த ஆப் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் ஆன் லைனில் பணம் கட்டி மதுவாங்கும் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டது. 

அதன்படி அரசு மதுபான விற்பனை கழகத்தின் இணைய தளத்தில் செல்போன் நம்பரை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். உடனே குறிப்பிட்ட செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் ஓ.டி.பி. வரும். இதை பரிசோதித்த பின் இமெயில், பிறந்த தேதி, பாஸ்வேர்டு கொண்ட பதிவை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன்பின் மாவட்டம், மது கடையை தேர்வு செய்து, தேவையான மதுவுக்கு டெபிட், கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி பணம் கட்ட வேண்டும். தொடர்ந்து செல்போனில் ரகசிய குறியீட்டு எண் வரும். அதை கடையில் காண்பித்து மது வாங்கி கொள்ளலாம். இந்த வசதி முதற்கட்டமாக நேற்று திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி ஆகிய இடங்களில் உள்ள 3 கடைகளில் சோதனை முறையாக அமல்படுத்தப்பட்டது. முதல் நாளிலேயே 400 பேர் மது வாங்கி உள்ளனர். தற்போது இது வெற்றி அடைந்துள்ளதால், விரைவில் கூடுதல் மதுக்கடைகளில் இந்த திட்டத்தை அமல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து