பிரதமர் மோடிக்கு 20 ஆண்டுகளாக ராக்கி கயிறு அனுப்பும் பாக். சகோதரி

Mosin-Shake 2021 08 20

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி ஒருவர் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை ஆகியவற்றை அனுப்பி வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

சகோதரத்துவத்தை விளக்கும் பண்டிகையாக வடமாநிலங்களில் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் காலண்டரில் ஷரவணா மாதத்தின் கடைசி நாளில் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ஆசி பெறுவார்கள். சகோதரிகளை ஆசீர்வாதம் செய்யும் சகோதரர்கள் அவர்களுக்குப் பரிசுகள், பணம், நகை ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்குவது வழக்கமாகும்.

அந்த வகையில் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 20 ஆண்டுகளாக ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை அனுப்பி ரக்‌ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த குவாமர் மோசின் ஷேக் என்ற பெண் திருமணம் முடிந்தபின் இந்தியாவில் குடிபெயர்ந்தார். தற்போது குஜராத்தின் அகமதாபாத் நகரில் வாழ்ந்து வருகிறார். பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஊழியராக இருந்த காலத்தில் இருந்து அவருக்கு ரக்‌ஷா பந்தன் நாளை முன்னிட்டு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டைகள் வழங்கி ஆசி பெற்று வருகிறார். 

மோடி குஜராத் முதல்வரான பின்னும் பிரதமராகப் பதவி ஏற்ற பின்பும் அவரைச் சந்திக்க முடியவில்லை என்பதால், தபால் மூலம் ராக்கி கயிறு, வாழ்த்து அட்டைகளை மோசின் ஷேக் அனுப்பி வருகிறார்.

நாளை 22-ம் தேதி ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுவதையடுத்து, பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டைகளை மோசின் ஷேக் அனுப்பி வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து