உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி திறன்வாய்ந்த தலைவரை இழந்து விட்டதாக வேதனை

MODI 2021 08 22

Source: provided

லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவராக இருந்தவர் கல்யாண் சிங் (வயது 89).  அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த ஜூலை 4-ம் தேதி முதல் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

அவருக்கு சிறுநீரக கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்சினை இருந்தது. இதனால் அவருக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.  எனினும், செப்சிஸ் மற்றும் பல்வேறு உள்உறுப்பு செயலிழப்பால் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மறைவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் மோடி  தனி விமானத்தில் லக்னோ நகருக்கு நேற்று சென்றார். அவரை விமான நிலையத்தில் உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.  இதன்பின்னர், கல்யாண் சிங்கின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, ஒரு திறன் வாய்ந்த தலைவரை இழந்துள்ளோம். நேர்மை மற்றும் நல்ல நிர்வாகத்தின் மறு உருவமாக அவர் திகழ்கிறார். அவரின் கனவை நிறைவேற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.  கல்யாண் சிங்கை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு மன வலிமை அளிக்க பிரார்த்திக்கிறேன் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து