ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு: மணிப்பூர் மாநில கவர்னராக இல.கணேசன் நியமனம் : முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Ela-Ganesan 2021 08 22

Source: provided

புதுடெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள இல. கணேசனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், புதுவை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தஞ்சாவூரில், 16.2.1945-ல் இலக்குமி ராகவன் - அலமேலு தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர் இல.கணேசன். தந்தை பலசரக்குக் கடைக்காரர், பத்திரிகை முகவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டதால், அண்ணன்களின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் கணேசன்.

1991-ல் பா.ஜ.க.வில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன் விரைவிலேயே மாநில அமைப்புச் செயலாளர் ஆனார். பா.ஜ.க.வில் மாநிலத் தலைவருக்கு நிகரான அதிகாரம் கொண்ட முக்கியமான பதவி இது. ஆர்.எஸ்.எஸ்.தான் அப்பதவியை நிரப்பும். அந்தப் பதவியிலிருந்தபடிதான் தமிழ்நாட்டில் கட்சியை வளர்த்தார் கணேசன்.

தற்போது பா.ஜ.க. செயற்குழு உறுப்பினராக 31 ஆண்டுகளாக இருக்கும் கணேசன், இடையில் தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளிலும் இருந்தார். தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராக்கி அவரை அழகுபார்த்தது பா.ஜ.க.

இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். சிக்கிம் கவர்னர் கங்காதர பிரசாத்,  மணிப்பூர் மாநில கவர்னராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது புதிய கவர்னராக இல. கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் கவர்னராக நியமித்த பிறகு  இல கணேசன் கூறியதாவது:    உணர்வுபூர்வமாக ஒரே வீடு போலத்தான் உணர்கிறேன்.  மணிப்பூரில் என்னை கவர்னராக நியமித்து இருப்பதன் மூலம் அனுபவ ரீதியாக இது ஒரே நாடு என்று உணர்வதற்கான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.  இதற்கு முன்பாக கூட மத்திய பிரதேச மக்களுக்கு பணி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது மணிப்பூர் மாநில மக்களுக்காக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  கவர்னராக  நியமிக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார். 

மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர்  மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மணிப்பூர் மக்களுக்கு சேவையாற்ற உள்ள எல்.கணேசனுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மணிப்பூரில் அவருக்கு அமைதியான மற்றும் வெற்றிகரமான பணிக்காலம் அமைய வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநில கவர்னராக பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும், நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான இல.கணேசனுக்கு  வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூகவலைதளங்களில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இல. கணேசனை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 

மேலும் இல.கணேசனுக்கு தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

மணிப்பூர் மாநில  கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜனதாவின் மூத்த தலைவரும் நான் பெரிதும் போற்றும் இல.கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். 

அதே போல தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசனின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து