தெய்வங்கள் பெயர்களில் உள்ள கோவில் நிலங்களுக்கு பூசாரிகள் உரிமை கொண்டாட முடியாது : உச்சநீதிமன்றம்

Supreme-Court 2021 07 19

தெய்வங்கள் பெயர்களில் உள்ள நிலங்களுக்கு உரிமை கொண்டாடவோ அரசு உரிமை கோருவதை தடுக்கவோ கோவில்களின் பூசாரிகளுக்கு உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில் கோவில் நிலங்களின் உரிமையாளர்களாக பதிவு செய்யப்பட்டு இருந்த பூசாரிகளின் பெயர்களை வருவாய்துறை பதிவேடுகளில் இருந்து அம்மாநில அரசு நீக்கியது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் ஏ.எஸ். போபண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது முறையற்ற வகையில் கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்படுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பூசாரிகள் சங்கம், பூசாரிகளுக்கு பூமி சாமி உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாக உத்தரவுகளால் உரிமையை பறிக்க முடியாது என்றும் வாதிட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கில் தீர்ப்பு அளித்தனர்.

அதில் நீதிபதி ஹேமந்த் குப்தா , கோவில் சொத்துகளை நிர்வகிக்கும் உரிமை தான் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர குத்தகைதாரர்கள் என்ற நிலைக்கு பூசாரிகள் உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்தார். பூசாரிகளை பூமி சாமியாக கருத முடியாது என்பதால் அவர்களுக்கு கோவில் நிலங்களின் மீது எந்த உரிமையும் கிடையாது என்றும் நீதிபதி தெரிவித்தார். 

நில ஆவணங்களில் தெய்வங்களின் பெயர்களை குறிப்பிட்டால் போதுமானது என்றும் தெய்வங்களே கோவில் நிலங்களின் உரிமையாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் கோவில் நிலங்களின் உரிமையாளர்களாக பூசாரிகளுக்கு பதிலாக மாவட்ட ஆட்சியர்களை நியமிப்பதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து