40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு: தமிழக சுகாதார துறை செயலாளர் தகவல்

Radhakrishnan-2021-09-10

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

தமிழ்நாடு முழுவதும் நாளை  20 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது.  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் ஞாயிற்றுக் கிழமை 40 ஆயிரம் மையங்களில் நடைபெற இருப்பதையொட்டி முன்கூட்டியே தடுப்பூசியை அதிகமாக வரவழைத்துள்ளோம். தற்போதைய நிலவரப்படி 32 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகள் தொலைதூர பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் பிற மாநில எல்லைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளோம்.  கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காகவும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் மெகா சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மையத்திலும் போதிய பணியாளர்கள் பணியில் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சுற்றுயுள்ள பகுதிகள் மட்டுமின்றி 19 மாவட்டங்களில் ஏற்ற இறக்கத்துடன் கொரோனா தொற்று உள்ளதால் இந்த முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து