கன்னி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 16-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் முன்பதிவு

sabarimala temple-2021-09-09

மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக வரும் 16-ம் தேதி  சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்கு ஆன் லைனில் முன்பதிவு செய்யும் வசதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. பெரும்பாலும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட வெளிமாநில பக்தர்கள்தான் இந்த வசதியை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழக பக்தர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் எளிதில் தரிசனம் செய்து விட்டு திரும்ப முடியும் என்பதால் வெகு தொலைவில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் தான் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவுக்கு பின்னர் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செப்பவர்களுக்கு மட்டுமே தற்போது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்கு நடை திறக்கப்பட்ட போது தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் முன்பதிவு செய்யும் பக்தர்களில் பெரும்பாலானோர் தரிசனத்திற்கு வருவதில்லை. கடந்த மாத பூஜையின் போது முன்பதிவு செய்த 6772 பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை. இதன் காரணமாக மற்ற பக்தர்களுக்கு முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மாதாந்திர பூஜைக்காக வரும் 16-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16-ம் தேதி மாலை வழக்கமான மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ்வரரு தலைமையில் மேல்சாந்தி ஜெயராஜ் போத்தி நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார். 17-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.  வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.  வரும் 21-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் நடக்கும். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., கொரோனா நெக்கட்டிவ் சான்று அல்லது கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்ததற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும்.  வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்ய ஐயப்ப பக்தர்கள் சபரிமலையின் sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸம் போர்டு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து