முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்வமுடன் திரளாக கலந்து கொண்ட மக்கள்: தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் நடந்த மெகா சிறப்பு முகாம் நிறைவு 25.83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் நேற்று தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்தது.  இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.  காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் மாலை 7 மணி வரை நடைபெற்றது. இதில் 25.83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

சிறப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அரசு சார்பில் ஒரு வாரத்துக்கு முன்பே அதற்கான முன் ஏற்பாடுகள் செய்யும் பணி மாவட்ட கலெக்டர்கள் மூலம் செய்யப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் தடுப்பூசி போடாத மக்களை தடுப்பூசி போட வைக்க விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாக தெருத்தெருவாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. செல்போன்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுக்கப்பட்டிருந்தன.

இதனால் நேற்று காலையில் தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் போது ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் முதலுதவி சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.  சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட உதவிகள் செய்தனர். அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடாதவர்கள் வந்து ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதனால் நிறைய முகாம்களில் காலையிலேயே கூட்டம் அதிகம் காணப்பட்டது. 

தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊசி போட வருபவருடன் துணைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். சென்னையை பொறுத்தவரை 1,600 சிறப்பு முகாம்களில் நேற்று  காலை 7 மணியில் இருந்தே தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.   சென்னையில் 600 டாக்டர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 7000 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  சில இடங்களில் தடுப்பூசி போடும் மக்களுக்கு பரிசு பொருட்களும் அறிவிக்கப்பட்டன. இதனால், மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றனர். 

இந்நிலையில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் 25.83  லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து