இந்தியாவில் மிக விரைவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி:

Travel-India 2021 09 20

Source: provided

புதுடெல்லி : கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதையடுத்து, மிக விரைவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கதவுகள் திறக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டது. இப்போது சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் முதல் கட்டமாக 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக விசா வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், அனைத்துத் துறைகளின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக அடுத்த 10 நாட்களில் மத்திய அரசு முறைப்படியான அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து, இந்த முடிவை மத்திய அரசு எடுக்கிறது எனத் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவில் பாதிக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 80 கோடியைக் கடந்துவிட்டது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை 5 லட்சம் பயணிகளுக்கு வழங்கவும், இதன் மூலம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குக் குறுகிய காலத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு மட்டும் இந்த இலவச விசா வழங்கப்பட உள்ளது. ஒரு மாதத்துக்கான விசாவுக்கான கட்டணம் 25 டாலர்களாகவும், ஓராண்டுக்கு 40 டாலர்களாகவும் இ-விசாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கண்காணித்து, அதன் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து படிப்படியாகவே ஒவ்வொரு நாட்டுக்கும் தளர்வுகளை மத்திய அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து