முக்கிய செய்திகள்

நாட்டில் ஒரேநாளில் கொரோனா பலி எண்ணிக்கை 666 ஆக உயர்ந்தது ஏன்? - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்

Corona-kills 2021 10 23

Source: provided

புதுடெல்லி : நாட்டில் ஒரேநாளில் கொரோனா பலி எண்ணிக்கை 666 ஆக உயர்ந்தது ஏன் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்., இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 9,361 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,59,562 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,73,728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 233 நாட்களில் மிகக் குறைவு என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1,01,30,28,411 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 68,48,417 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், கேரள மாநிலத்தில் புதிதாக 9,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 99 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். அதில் கூடுதலாக, 292 இறப்புகள் (ஜூன் 14, 2020 வரை பதிவாகியுள்ளன, ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லாததால் பதிவு செய்யப்படவில்லை ) மற்றும் 172 இறப்புகள் (மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி பதிவாகியுள்ளன) மொத்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டன. 

இதன்படி மொத்த இறப்பு எண்ணிக்கை 27,765 ஆக உயர்ந்ததாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. கேரள மாநிலத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மேலும் 291 இறப்புகள் சேர்க்கப்பட்ட நிலையில், தினசரி கொரோனா இறப்புகளில் (666) இந்தியா நேற்று ஒரு பெரிய அதிகரிப்பை பதிவு செய்தது. இதன்மூலம் இந்தியாவில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,53,708 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து