முக்கிய செய்திகள்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      தமிழகம்
Weather-Center 2021 06-30

Source: provided

சென்னை : தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 31-ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை கடந்த 25-ம் தேதி தொடங்கியது. 3 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித அல்லது கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த  48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நாளை முதல் 31-ம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, கேரள கடலோரப் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்  பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து