முக்கிய செய்திகள்

தடுப்பூசி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படாமல் உள்ளன: டிசம்பர் மாத இறுதிக்குள் பெரியவர்களுக்கு முதல் டோஸை செலுத்தியிருக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Central-government 2021 07

Source: provided

புதுடெல்லி : மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய தடுப்பூசி மருந்துகள் இன்னும் அதிகம் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு டிசம்பர் மாத இறுதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் முதல் டோஸை கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஊசி போடப்படுகிறது. கடந்த 21-ம் தேதி இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இதுவரை நாடு முழுவதும் 103 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. 72 கோடி பேர் முதல் தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள். 31 கோடி பேர் 2-வது தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

முதல் ஊசி போட்டவர்கள் குறிப்பிட்ட தவணை காலத்திற்கு பிறகு 2-வது ஊசி போட வேண்டும். ஆனால் தவணைக்காலம் முடிந்த பிறகும் சுமார் 11 கோடி பேர் 2-வது தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 76 சதவீதம் பேர் மட்டுமே ஒரு தடவையாவது தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள். 32 சதவீதம் பேர்தான் 2-வது ஊசியும் போட்டுள்ளனர். 

தற்போது தடுப்பூசி தாராளமாக கிடைக்கிறது. மத்திய அரசு, மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த தடுப்பூசி மருந்துகளில் 12 கோடியே 37 லட்சம் டோஸ் மருந்து இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. தாராளமாக மருந்து கிடைத்தும் சிலர் ஊசி போட ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். இதனால் தான் அனைவருக்கும் இன்னும் தடுப்பூசி போட முடியாமல் இருக்கிறது. எனவே ஊசி போடாமல் இருக்கும் அனைவரையும் கண்டறிந்து டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஒரு தடவையாவது ஊசி போட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது டிசம்பர் இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசியை ஒரு தடவையாவது போட்டுவிட வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை நடத்தி உள்ளார். 11 மாநிலங்களில் தடுப்பூசி போடுவது குறைவாக இருக்கிறது. அங்கு வேகமாக பணிகளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

இதற்கிடையே தடுப்பூசி போடுவதை முழுமையாக செயல்படுத்துவது தொடர்பாக நேற்று அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மன்டேவியா ஆலோசனை நடத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து