முக்கிய செய்திகள்

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் மத்திய குழுவினர் ஆலோசனை

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      தமிழகம்
CM-4 2021 11 24

மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான குழுவினர் நேற்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலை எங்கும் மழைநீர் தேங்கியது. விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்கள் அழுகின.

இதையடுத்து, தமிழகத்திற்கு வந்த மத்தியக் குழுவினர் இரண்டு பிரிவாக பிரிந்து கடந்த 3 நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  குடியிருப்புகள், விளைநிலங்கள், சாலைகள் என அனைத்தையும் மத்தியக் குழு ஆய்வு செய்தது. பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்தனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர், நேற்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வு குறித்து மத்தியக் குழுவினர் முதல்வரிடம் ஆலோசனை நடத்தினர்.  

முன்னதாக வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசின் சார்பில், மத்திய அரசிடம் ரூ.2,629.29 கோடி நிவாரணம் கோரப்பட்டுள்ளது. இதில் ரூ.549.63கோடியை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து