முக்கிய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ஜாவித் புயல்: ஆந்திர-தெற்கு ஒடிசா இடையே நாளை கரையை கடக்கிறது

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      இந்தியா
Andhra-Odisha 2021 12 03

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நண்பகலில் புயலாக மாறியுள்ளது. இந்த புயல் நாளை (5-ம் தேதி) ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு ‘ஜாவித்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் முதல் புயல் இதுவாகும். இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது.,

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை உருவானது. இது அந்தமான் கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை நிலவியது. இது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வியாழக்கிழமை காலை நிலவியது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வியாழக்கிழமை இரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. தொடா்ந்து, வடமேற்கு திசையில் நகா்ந்து நேற்று நண்பகலில் புயலாக வலுப்பெற்றது.

இது மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். ஜாவித் என்று பெயரிப்பட்டுள்ளது. இந்த புயல் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கரையை நோக்கி செல்லக்கூடும். வரும் 5-ம் தேதி காலை (நாளை) ஒரிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கும் எனத் தெரிகிறது.

இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 3 முதல் 6 வரை கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகள், வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், சிலவேளைகளில் 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 3-ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதனிடையே நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து