முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இதுவரை 8,690 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள நிலை அறிக்கையில், வடகிழக்குப் பருவமழையில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவின் மாவட்ட வாரியான அளவீடுகளும் அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட விவரங்களும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம்கள், நிவாரண முகாம்கள் நடத்தப்பட்ட விவரத்தையும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகைமை சார்பில் புள்ளிவிவரங்களோடு அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளதாவது.,

கடந்த 24 மணி நேரத்தில், 30 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 3.6 மி.மீ. ஆகும். திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் (274.6 மி.மீ.) அதிகனமழையும், தென்காசி மாவட்டம், ஆயிகுடி (101.0 மி.மீ.) மற்றும் தேனி மாவட்டம், பெரியாறு (81.0 மி.மீ.) ஆகிய இரண்டு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை 01.10.2021 முதல் 07.12.2021 வரை 683.4 மி.மீ. பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 385.9 மி.மீட்டரை விட 77 சதவீதம் கூடுதல் ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 257 நபர்கள் 3 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 1,330 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதர மாவட்டங்களில், 2156 நபர்கள் 36 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 2,989 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டிஎம்சி,-ல், 6.12.2021 நிலவரப்படி, 212.009 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இது 94.52 சதவீதம் ஆகும்.

மழை நீர் தேங்கியுள்ள 6 பகுதிகளில், அதிக திறன் கொண்ட 26 பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை 19,740 மருத்துவ முகாம்கள் மூலம் 6,48,689 நபர்கள் பயனடைந்துள்ளனர். மழை நீர் சூழ்ந்த பகுதிகளில், 918 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. 54 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 47 கால்நடைகள் இறந்துள்ளன. 633 குடிசைகள் பகுதியாகவும், 55 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 688 குடிசைகளும், 100 வீடுகள் பகுதியாகவும், 15 வீடு முழுமையாகவும் ஆக மொத்தம் 115 வீடுகள் சேதமடைந்துள்ளன.  இவ்வாறு தமிழக அரசின் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து