முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டவுன் டெஸ்ட் போட்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி: ஏமாற்றத்தில் இந்திய அணி

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்டில் ஏமாற்றிய இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 223, தென் ஆப்ரிக்கா 210 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்னுக்கு சுருண்டது. பின், 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 101 ரன் எடுத்திருந்தது. பீட்டர்சன் (48) அவுட்டாகாமல் இருந்தார்.

பீட்டர்சன் அபாரம்:

நான்காம் நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு 111 ரன் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன், வான் டெர் துசென் ஜோடி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. ஷமி பந்தில் 2 ரன் எடுத்த பீட்டர்சன், டெஸ்ட் அரங்கில் தனது 2-வது அரைசதமடித்தார். நிதானமாக விளையாடிய இவர்கள், இந்திய பவுலர்களிடம் கொடுக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்திருந்த போது ஷர்துல் தாகூர் வேகத்தில் பீட்டர்சன் (82) போல்டானார்.

பவுமா அசத்தல்:

பின் இணைந்த வான் டெர் துசென், டெம்பா பவுமா ஜோடி பொறுப்பாக விளையாடியது. பும்ரா வீசிய 52-வது ஓவரில் 2 பவுண்டரி விளாசிய பவுமா, அஷ்வின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வான் டெர் துசென் (41), பவுமா (32) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, ஷமி, ஷர்துல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தென் ஆப்ரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் கைப்பற்றினார்.

புஜாரா ஏமாற்றம்:

பும்ரா வீசிய 40வது ஓவரின் 4வது பந்தில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை  சிலிப் பகுதியில் நின்றிருந்த புஜாரா நழுவவிட்டார். அப்போது 59 ரன் எடுத்திருந்த பீட்டர்சன், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு 82 ரன் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். பேட்டிங்கில் சொதப்பிய புஜாரா, பீல்டிங் ஏமாற்றியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

ஆறாவது முறை

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. ஆனால் அடுத்த இரு டெஸ்டில் ஏமாற்றியதால் தொடரை இழந்தது. டெஸ்ட் அரங்கில், ஒரு தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றும், தொடரை இழந்த சோகம் இந்திய அணிக்கு 6வது முறையாக அரங்கேறி உள்ளது. இதற்கு முன், 1984:85 (எதிர்: இங்கிலாந்து, இடம்: இந்தியா), 2002 (எதிர்: விண்டீஸ், இடம்: வெஸ்ட் இண்டீஸ்), 2006-07 (எதிர்: தென் ஆப்ரிக்கா, இடம்: தென் ஆப்ரிக்கா), 2012-13 (எதிர்: இங்கிலாந்து, இடம்: இந்தியா), 2014ல் (எதிர்: இங்கிலாந்து, இடம்: இங்கிலாந்து) இப்படி ஏமாற்றம் அடைந்தது.

நழுவிய வரலாறு

இந்திய அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப முதல் போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த இரு டெஸ்டில் ஏமாற்றியதால் தொடரை இழந்தது. இதுவரை 8 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, ஒரு முறை (2010-1111) மட்டும் தொடரை சமன் செய்திருந்தது. ஏழு முறை (1992-93-96 & 97, 2001&02, 2006&07, 2013&14, 2017&18, 2021&22) தென் ஆப்ரிக்கா கோப்பை வென்றது.

ஒருநாள் தொடர்

டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் ஜன. 19-ல் பார்ல் நகரில் துவங்குகிறது. அடுத்த இரு போட்டிகள் ஜனவரி. 21 (இடம்: பார்ல்), ஜனவரி. 23-ல் (இடம்: கேப்டவுன்) நடக்கவுள்ளன.

அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் முதலிடம் பிடித்தார். இவர், 3 டெஸ்டில் 276 ரன் (3 அரைசதம்) எடுத்தார். அடுத்த ஐந்து இடங்களை தென் ஆப்ரிக்காவின் எல்கர் (235 ரன்), இந்தியாவின் லோகேஷ் ராகுல் (226), தென் ஆப்ரிக்காவின் பவுமா (221), இந்தியாவின் ரிஷாப் பன்ட் (186), விராத் கோஹ்லி (161) கைப்பற்றினர்.

20 விக்கெட்

அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ரபாடா முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 3 டெஸ்டில், 20 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஐந்து இடங்களை தென் ஆப்ரிக்காவின் ஜான்சென் (19 விக்கெட்), லுங்கிடி (15), இந்தியாவின் முகமது ஷமி (14), ஷர்துல் தாகூர் (12), பும்ரா (12) கைப்பற்றினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து