முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்: மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய சாலைகள்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனாவை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கின்போது பெட்ரோல் நிலையங்கள், பால் விற்பனை நிலையங்கள், பத்திரிகை அலுவலகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டன. 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த வாரம் 9-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2-வது வாரமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே ஓடின. பால், சரக்கு வாகனங்கள், பெட்ரோல் வாகனங்கள், துப்புரவு பணியாளர்களின் வாகனங்கள், பத்திரிகையாளர்களின் வாகனங்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு 10 மணியில் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவில் தொடங்கப்பட்ட வாகன சோதனை நேற்றும் நீடித்தது.

சென்னையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 312 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்றது. அத்தியாவசிய பணிகளுக்காக வாகனங்களில் சென்றவர்களை அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர். இதற்காக ஒவ்வொரு சந்திப்புகளில் 5 காவலர்கள் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். முக்கிய சந்திப்புகளில் சாமியானா பந்தல்களை போட்டு தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணித்தனர்.

முழு ஊரடங்கின்போது பெட்ரோல் நிலையங்கள், பால் விற்பனை நிலையங்கள், பத்திரிகை அலுவலகங்கள் ஆகியவை செயல்பட முழு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. உணவகங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தபோதிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டது. இவை தவிர்த்து மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் முழு ஊரடங்கு அன்று மெட்ரோ ரெயில் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் மெட்ரோ ரெயில் நிலையங் களும் மூடப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் மின்சார ரெயில்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொண்டனர்.

தாம்பரம், ஆவடி போலீஸ் கமி‌ஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் சென்னையை போன்று வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. தாம்பரம் போலீஸ் கமி‌ஷனர் ரவி, ஆவடி கமி‌ஷனர் சந்தீப்ராய் ரத்தோ ஆகியோர் மேற்பார்வையில் வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு இருந்தன. காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. காஞ்சீபுரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னையை போன்று திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. 1 லட்சம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து