முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் 18 சதவீதம் அதிகரிப்பு: நாட்டில் மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

நாட்டில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு 18 சதவீதமாக அதிகரித்து 2.82 லட்சமாக பதிவாகியுள்ளது. மேலும், ஒமைக்ரான் பாதிப்பும் 8,961 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 122 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 441 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,87,202 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,82,970 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

கடந்த 15-ம் தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 2.71 லட்சமாக இருந்தது. மறுநாள் 2.58 லட்சமாகவும், நேற்று முன்தினம் 2.38 லட்சமாகவும் குறைந்திருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் 3-வது அலையில் இதுவரை இல்லாத அளவில் பாதிப்பு உச்சத்துக்கு சென்றுள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக கர்நாடகாவில் 41,457 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு நேற்று முன்தினம் 27,156 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 39,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தினசரி பாதிப்பு 22,946-ல் இருந்து 28,481 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் 23,888, குஜராத்தில் 17,119, உத்தரபிரதேசத்தில் 14,701, டெல்லியில் 11,684, ஒடிசாவில் 11,086, மேற்கு வங்கத்தில் 10,430 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தினசரி பாதிப்பு விகிதம் 14.43 சதவீதத்தில் இருந்து 15.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 79 லட்சத்து 1 ஆயிரத்து 241 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 122 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 441 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,87,202 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 1,88,157 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சத்து 83 ஆயிரத்து 39 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி 18,31,000 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது 94,372 அதிகம் ஆகும்.

மேலும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 8,961 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் 76,35,229 டோஸ் தடுப்பூசிகளும், மொத்தம் 158 கோடியே 88 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில் சமீபகாலத்தில் இல்லாத அளவில் ஒரேநாளில் 18,69,642 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனை எண்ணிக்கை 70.74 கோடியாக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து