முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 9 மே 2022      தமிழகம்
OPS 2021 07 12

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வீடுகள் இடிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அங்கு வீடுகளை இடிக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.,  தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் மீனவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும், சிதிலமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித் தரப்படும், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன. 

இவற்றிற்கெல்லாம் முற்றிலும் முரணான வகையில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 250க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளும் பணியில் தி.மு.க. அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பொதுப் பணித்துறை சார்பில் 259 குடும்பங்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டு, அங்கு இப்போது இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட 20 வீடுகள் இடிக்கப்பட்டு விட்டதாகவும், கண்ணையா என்பவர் தீக்குளித்து இறந்துவிட்டதாகவும், இது போதாது என்று பக்கத்து தெருவில் உள்ள வீடுகளும் இடிக்கப்பட வேண்டுமென்று பொதுத் பணித் துறை உதவிப் பொறியாளர் கூறுவதாகவும், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் ஆகியோரின் அணுகுமுறை சரியில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

மேற்படி பொருள் குறித்து அப்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கேள்வி எழுப்பியபோது, அந்தப் பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு அரசு உரிய வழிவகை செய்யும் என நான் பதில் அளித்து இருந்தேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தவரை, குடியிருக்கும் ஏழை மக்களை ஆதரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது என்பதோடு, அவர்களுடைய வீடுகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ தெருவில் மொத்தம் 625 குடியிருப்புகள் உள்ளன. இதில் தெற்கு பக்கிங்காம் கரையை ஒட்டி, இளங்கோ தெருவின் மேற்கில் 366 குடியிருப்புகள் உள்ளன. கரைக்கு எதிராக, இளங்கோ தெருவின் கிழக்கே 259 குடியிருப்புகள் உள்ளன. இதில், இளங்கோ தெருவின் மேற்கில் உள்ள 336 குடியிருப்புகள் பக்கிங்காம் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்ததால் அவை அகற்றப்பட்டு விட்டன.

மீதமுள்ள 259 குடியிருப்புகள், இளங்கோ தெருவிற்கு கிழக்கே உள்ளன. இந்தப் பகுதி குடிசைப் பகுதி என 1973 ஆம் ஆண்டே தமிழ்நாடு குடிசைப் பகுதி மேம்பாடு மற்றும் அகற்றுதல் சட்டம், 1971ன்படி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தப் பகுதிகளை அகற்ற சட்டத்தில் வழிவகை இல்லை. இதனை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அவர்களும் 9-3-2022 கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டார். இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏழையெளிய மக்களுக்கு எதிராக வந்துவிட்டது.

நான் இந்த அரசைக் கேட்டுக் கொள்வதெல்லாம், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இடிப்புப் பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும், இளங்கோ தெருவின் கிழக்கே உள்ள 259 குடியிருப்புகள் குடிசைப் பகுதி’ என 1973 ஆம் ஆண்டே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டது என்பதையும், மேற்படி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ததே தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தான் என்பதையும் அவர்கள் அனைத்துவிதமான வரிகளையும் அரசாங்கத்திற்கு செலுத்தி வருகிறார்கள்.

அந்தக் குடியிருப்புகள் சாலையையோ அல்லது பக்கிங்காம் கால்வாயையோ ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்பதையும் அரசின் சார்பில் ஒரு மனு மூலம் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகத் தெரிவித்து, ஏழைஎளிய மக்கள் தொடர்ந்து அங்கேயே குடியிருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த கண்ணையாவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், காவல் துறையையும் மீறி குடியிருப்பு வாசிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து