முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ் ஊழியர்களுக்கு 5 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்த அரசு நடவடிக்கை: பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் பேட்டி

வியாழக்கிழமை, 12 மே 2022      தமிழகம்
sivasankar-2022-05-12

தொழிற்சங்கங்கள் கோரிக்கை குறித்து 3 வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீதம் வரை சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரசு போக்குவரத்து கழகங்களில் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 1.9.2019ல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊதிய உயர்வு உடன்பாடு ஏற்படாமல் தள்ளிப்போனது. 2 வருடமாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த வருடம் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊதிய உயர்வு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பஸ் தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி, மருத்துவ சலுகை வழங்குதல், ஓய்வூதிய நிலுவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் 4வது கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நேற்று சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார். போக்குவரத்து செயலாளர் கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் சுந்தர் தயாளன், ஊதிய பேச்சுவார்த்தை கன்வீனரும், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனருமான அன்பு ஆபிரகாம் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., பொருளாளர் நடராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், தலைவர் தாடி மா.ராசு, சி.ஐ.டி.யு தொழிற்சங்க செயலாளர் சவுந்தர்ராஜன், ஏ.ஐ.டி.யு.சி. ஆறுமுகம், ஐ.என்.டி.யு.சி. விஷ்ணுபிரசாத உள்ளிட்ட 65 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கூறியதாவது., போக்குவரத்துத் துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். 8 %  ஊதிய உயர்வு வழங்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். 5% வரை ஊதிய ஊயர்வு வழங்க அரசு தயார். இதுகுறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து 3 வாரங்களில் முடிவு எடுக்கப்படும். பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். மகளிர் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு படித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து