முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு வருட காலத்தில் 10 ஆண்டு கால சாதனைகளை நிறைவேற்றி உள்ளோம் : திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
CM-1 2022 05 13

Source: provided

சென்னை : ஓராண்டு காலத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தால் எதை சாதிக்க முடியுமோ அதைவிட பல மடங்கு சாதனையை இன்றளவும் நாம் சாதித்து காட்டி இருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

சென்னையில் நேற்று நடைபெற்ற தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மகன் ஆர்.நெல்சன் மண்டேலா பா. அபிராமி ஆகியோரது திருமணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி அமைந்ததற்கு பிறகு தமிழகத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சாதனைகள் மட்டுமல்ல ஏற்கனவே இருந்த சோதனைகளுக்கு முடிவுகட்டி இருக்கிறோம். சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறோம்.  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஓராண்டு காலம் தான் முடிந்திருக்கிறது. ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தால் எதை சாதிக்க முடியுமோ அதைவிட பல மடங்கு சாதனையை இன்றளவும் நாம் சாதித்து காட்டி இருக்கிறோம்.

இல்லம் தேடி கல்வியாக இருந்தாலும், மக்களை தேடி வரக்கூடிய மருத்துவமாக இருந்தாலும், நான் முதல்வன் என்கிற திட்டமாக இருந்தாலும், இன்னுயிர் காப்போம் நம்மை காக்க 48 என்கிற திட்டமாக இருந்தாலும், சமத்துவபுரங்களாக இருந்தாலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டமாக இருந்தாலும், ஏறக்குறைய 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கக்கூடிய பணிகளாக இருந்தாலும், தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதிகளை சொன்னோமோ அந்த வாக்குறுதிகளை மட்டுமல்ல சொல்லாத பல வாக்குறுதிகளையும் செய்து முடித்திருக்கக்கூடிய ஆட்சி தான் நம்முடைய ஆட்சி.

வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னென்ன உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையை புத்தகமாக வெளியிடுவது வழக்கம். ஆனால் இப்போது நாம் தேர்தல் அறிக்கை வெளிட்டது மட்டுமல்ல. இந்த ஓராண்டு காலத்தில் என்னென்ன செய்து முடித்திருக்கிறோம் என்பதையும் புத்தகமாக வெளியிட்டு மக்களிடம் கருத்து சொல்லக்கூடிய அளவுக்கு பல காரியங்களை நாம் செய்து முடித்திருக்கிறோம்.

நாம் செய்திருக்கக்கூடிய சாதனைகளில் ஒரு மிகப்பெரிய சாதனை என்ன வென்றால் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பேருந்து கட்டண சலுகை. இந்த திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பெண்கள் அதிக அளவிற்கு பயன்பெறக்கூடிய வகையில் அந்த திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கிறது. வேலைக்கு போகக்கூடிய பெண்களின் அன்றாட செலவில் பெரும் சுமையை குறைத்திருக்கிறோம். புள்ளி விவரத்துடன் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயில் இருந்து 1600 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய ஒரு சாதனையை நாம் செய்து முடித்திருக்கிறோம். இப்படி மிச்சமாகும் பணத்தை சேமித்து வைக்கும் அளவுக்கு பக்குவம் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து