முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை: தமிழக மாணவர்களிடம் இந்தியை திணிக்கக்கூடாது : கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
Ponmudi 2022 05 11

Source: provided

கோவை : தமிழக மாணவர்களிடம் இந்தி மொழியை திணிக்கக்கூடாது என பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நேற்று (மே 13) நடந்தது. துணைவேந்தர் காளிராஜ் வரவேற்றார். கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.

இவ்விழாவில் , உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் உயர் கல்வியில் படித்து வருகின்றனர். இது தான் திராவிட மாடல். தமிழகம், இந்திய அளவில் கல்வியில் சிறந்து விளங்குகிறது. இது பெரியார் தோன்றிய மண். அனைவரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அளவில் தமிழகம் 53 சதவீதம் உயர் கல்வியில் உயர்ந்து உள்ளோம்.

தமிழக முதல்வர் கல்வி, சுகாதாரம் இரண்டு கண்கள் போல என கூறியுள்ளார். கல்வித்துறை மற்றும் தொழில்துறை, தொழிலாளர் நலத்துறை இணைந்து படிக்கும் போதே மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

கவர்னரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன், நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. இந்திக்கும் எதிரானவர்கள் இல்லை. இந்தி படிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்தியை படிக்கட்டும். அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. இந்தியை மாற்று மொழியாக வைத்து கொள்ளலாம். எதிர்க்கவில்லை ஆனால் கட்டாயம் ஆக்க கூடாது. தமிழகத்தில் தாய் மொழியாக தமிழ், சர்வதேச மொழியாக ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது. 

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பலர் கூறினர். ஆனால், வேலை கிடைக்கிறதா?. இந்தி படித்தவர்கள் இங்கு பானி பூரி தான் விற்பனை செய்கின்றனர். நாங்கள் இன்டர்நேஷனல் மொழியான ஆங்கிலத்தை படித்து வருகிறோம்.‌ எதற்கு மாற்று மொழி. நாங்கள் புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயாராக உள்ளோம். ஆனால், மொழியில் எங்கள் சிஸ்டத்தை தான் பின்பற்றுவோம்.

தமிழக முதல்வர், மாணவர்களுக்காக தமிழ்நாடு கல்வி கொள்கை குழுவை ஏற்படுத்தி உள்ளார். இந்த குழுவின் அடிப்படையில் கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும். கவர்னரிடம் எங்களின் உணர்வை தான் வெளிப்படுத்துகிறோம். அதனை புரிந்து கொண்டு கவர்னர் மத்திய அரசிடம் எங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்.

தமிழ் மாணவர்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்றுக்கொள்ள தயாராக உள்ளனர். இந்தி மாற்று மொழிதான். அதனை கட்டாயமாக்க கூடாது.‌ தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டு தான் கட்டாய‌ மொழியாக உள்ளது. மாணவர்கள் மூன்றாவது மொழியாக என்ன வேண்டுமானாலும் படிக்கலாம். இது தான் தமிழ்நாடு கல்வி கொள்கை குழு மூலம் செயல்படுத்தப்படும்.

மீண்டும் ஒரு முறை கவர்னரிடம் கோரிக்கை வைக்கிறேன். எங்கள் பிரச்சினை, மாணவர்கள் பிரச்சினை ஆய்வு செய்து புதிய கொள்கை குறித்து ஆய்வு செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழ் உங்களின் படிப்பு அறிவை வளர்த்துக் கொள்ள உதவும். ஆசிரியர்கள் தங்களின் தகுதியை மேம்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து