முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபோதையிலிருந்த பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசு பஸ் நடத்துனர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : மது போதையில் இருந்த பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசு பஸ் நடத்துனரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

நேற்று அதிகாலை 3.15 மணியளவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது, மதுராந்தகத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர் பெருமாள் பிள்ளை, பயணச்சீட்டு எடுக்க வலியுறுத்திய போது, அந்தப் பயணி நடத்துநரைத் தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக, நடத்துநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக அவர் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் பெருமாள் பிள்ளையின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக பத்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து