முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை

திங்கட்கிழமை, 23 மே 2022      தமிழகம்
Bus 2022-05-23

Source: provided

சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த வாரத்தை காட்டிலும் இரு மடங்காக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சொந்த ஊர்களுக்கும், வெளியூர் சுற்றுலா தலங்களுக்கும் 2 வருடங்களுக்கு பிறகு தற்போது செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். கொரோனாவால் வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் கோடை விடுமுறையை கழிக்க வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதனால் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை தினமும் 10 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்து அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்தனர். அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது வார இறுதி நாட்களில் 22 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள்.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

கோடை விடுமுறை காரணமாக அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிகை உயர்ந்துள்ளது. வெளியூர் சுற்றுலா தலங்களுக்கு 2 வருடங்களுக்கு பிறகு தற்போது செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். கொரோனாவால் வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் வார இறுதி நாட்களில் 1000 பஸ்களுக்கு 22 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளனர்.

மற்ற நாட்களில் 800 பஸ்களுக்கு 18,20 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்கின்றனர். குறிப்பாக ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதனால் குளிர்சாதன வசதி பேருந்துகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் அரசு விரைவு பஸ்களுக்கு தனியார் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்பட்ட வசதி நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. அதனால் டிக்கெட் கட்டணம் அதிகமாவதால் அரசு விரைவு போக்குவரத்து கழக இணையதளம் வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. தனியார் போர்ட்டல் மூலம் முன்பதிவு செய்ய இயலாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!