முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். கலந்து கொள்ள வேண்டும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விருப்பம்

புதன்கிழமை, 22 ஜூன் 2022      தமிழகம்
Jayakumar 2022-06-05

Source: provided

சென்னை : பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை', அந்த வகையில் ஒரு தவறான பாதையை நோக்கித்தான் ஓ.பி.எஸ். சென்றுகொண்டிருக்கிறார்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் அ.தி.மு.கவுக்கு அமைப்புகள் இருக்கிறதோ, அங்கிருந்து முழுமையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து ஒற்றைத் தலைமை அதுதான் அ.தி.மு.கவுக்கு தேவை என்பதை தீர்மானதித்து, அந்த ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்று கடந்த 8 நாட்களாக பல்வேறு மாவட்டத்திலிருந்து நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.கவின் அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் 75 மாவட்ட செயலாளர்கள், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகிகள், 25 மண்டல செயலாளர்கள், அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது மேலான ஆதரவை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். மேலும், ஒற்றைத் தலைமைதான் வேண்டும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, அத்தீர்மானம் அவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க ஜனநாயகம் மலர்ந்த ஒரு மாபெரும் இயக்கம். இங்கு எந்த அராஜகப் போக்கும் கிடையாது. தொண்டர்கள், ஆர்வத்தோடும் எழுச்சியோடும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனவே, அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் தப்பு மேல தப்பு செய்துகொண்டிருக்கிறார். பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, அந்த வகையில் ஒரு தவறான பாதையை நோக்கித்தான் அவர் சென்றுகொண்டிருக்கிறார் என்பதை ஆழ்ந்த மனகஷ்டத்தோடு நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

எனவே, அவர் பொதுக்குழுவில் கலந்து கொண்டு, பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம். எனவே, அங்கு எடுக்கப்படுகிற முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டாக வேண்டும். ஓ.பி.எஸ் உள்பட அனைவருமே கட்டுப்பட்டாக வேண்டும். அதுதான் தொண்டர்களின் எண்ணமும்கூட. பொதுக்குழுவில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். எனவே, அவர் கலந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து