முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனப்பாக்கத்தில் ரூ. 400 கோடியில் மெகா காலணி உற்பத்தி பூங்கா: இராணிப்பேட்டை விழாவில் முதல்வர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று இராணிப்பேட்டையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

இராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

இராணிப்பேட்டை என்பது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம். ஒரு காலத்தில் ராணுவப் பேட்டையாக இருந்ததுதான் இந்தப் பகுதி.  புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாக இருந்தாலும், இராணிப்பேட்டை பழமையானதுதான்.  வரலாற்றுச் சிறப்புக்குரிய மாவட்டமாக இது விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு அண்டை மாநிலங்களையும் இணைக்கும் இடத்தில், இந்த மாவட்டம் அமைந்திருப்பது, இன்னொரு சிறப்பாக நாம் பார்க்கிறோம்.  

தென்னிந்தியாவில் இருக்கும் தொழில் மையங்களில் ஒன்றாகவும் இராணிப்பேட்டை இருக்கிறது.  தோல் பொருள் ஏற்றுமதியில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் மாவட்டமாகவும், அனைத்து சமூக மக்களும் அமைதியாக வாழும் சமரசம் உலவும் மாவட்டமாகவும் இந்த மாவட்டம் இருக்கிறது.  மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய மாவட்டமாக இராணிப்பேட்டை மாவட்டம் திகழ்கிறது. 

ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கைகளையும், கேட்டுக் கேட்டு, பார்த்துப் பார்த்து, நிறைவேற்றித் தரும் அரசுதான் தி.மு.க. அரசு. பெற்றவர்கள் தான் தங்களுடைய  பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் தனித்தனியாக நிறைவேற்றித் தருவார்கள். அதைப்போலத்தான், ஒரு அரசும் செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

தோல் மற்றும் காலணி உற்பத்தித் தொழிலில், இராணிப்பேட்டை மாவட்டம் சிறந்து விளங்குகிறது. காலணி மற்றும் அது சார்ந்த பொருட்களின் உற்பத்தியை, சர்வதேசத் தரத்திற்கு மேலும் உயர்த்தி, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும். இதனால், சர்வதேச அளவில், தலைசிறந்த காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இராணிப்பேட்டை மாவட்டம் மேலும் வலுப்பெறும். இந்தப் பூங்கா நிறுவப்படும் காரணத்தால், 20 ஆயிரம் பேருக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதில் ஏறக்குறைய 70 சதவீதம், 80 சதவீதம் நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.  நாங்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியில் இருக்கக்கூடியவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  இன்னொன்றையும் சொல்கிறார்கள். ஸ்டாலின் விளம்பரப் பிரியராக இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்கள். இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கக்கூடியவன் நான். இனிமேல் எனக்கு விளம்பரம் எதற்கு?. ஏற்கனவே கிடைத்த புகழையும் பெருமையையும் காலமெல்லாம் கரையாமல் காப்பாற்றினால் போதும் என்று நினைப்பவன் நான்.

இந்த அரசாங்கத்தினுடைய இதயம் என்பது விளிம்புநிலை மக்களின் மகிழ்ச்சியில்தான் இருக்கிறது.  இந்த ஆட்சியானது கடந்த பத்தாண்டு காலமாக, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சரிவைச் சீர் செய்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க எந்நாளும் உழைத்து வருகிறது.  என் சக்தியை மீறியும் உங்களுக்காக உழைப்பேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து