முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய துணை கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-7 2022-08-15

Source: provided

சென்னை : இந்திய துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். 

சுதந்திர திருநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது, 

நமது வரலாறு எத்தனையோ தியாகிகளை, போராளிகளைக் கண்டிருக்கிறது. அத்தனை நெருப்பாறுகளையும் அகிம்சையால் கடந்த வரலாறு நம்முடையது.  அதனால்தான் உலக அரங்கில் நாம் நெஞ்சு நிமிர்த்தி இந்தியர்கள் என்று பெருமையோடு சொல்கிறோம்.  இந்தப் பெருமை தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகளையே சாரும். 

இந்தியா விடுதலை அடைந்த போது, நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய அவையின் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம்  இந்திய நாட்டின் பெண்கள் அனைவரின் சார்பாகவும் முதல் கொடியை வழங்கியவர் ஹன்ச மேத்தா.  விடுதலை இந்தியாவின் முதல் கொடியை ஒரு பெண்மணிதான் வழங்கினார். அத்தகைய மூவண்ணக் கொடியை வணங்குவதன் மூலமாக நாட்டை வணங்குகிறோம். 

இந்த இந்தியத் துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான். 1600-ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றியது என்றால் ஒரு நெல் மணியைக் கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது என்று 1755-ம் ஆண்டு நெல்கட்டாஞ்செவல் பூலித்தேவன் கூறினான்.  சிவகங்கைக்கு அருகிலுள்ள பனையூரைச் சேர்ந்த மண்டியிடாத மானப்போர் புரிந்த மாவீரன் கான்சாகிப் மருதநாயகம் 1764-ல் கொல்லப்பட்டார். 

கட்டபொம்மன்  தூக்கிலிடப்பட்ட ஆண்டு 1799. தூக்குமேடைக்குச் செல்லும்போது கூட தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பார்த்து சிரித்தபடியே கட்டபொம்மன் சென்றதாக அன்றைய கவர்னர் எட்வர்ட் கிளைவ் அவர்களுக்கு தளபதி பானர்மென் எழுதிய கடிதம் சொல்கிறது. கட்டபொம்மனின் மொத்தப் படைக்கும் தளபதியாக இருந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். அவரது மாமன் மகள் வடிவு, தற்கொலைப் படைத்தாக்குதலை நடத்தியவர்.

காளையார்கோவில் தாக்குதலில் கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டதும், சினம் கொண்ட வேங்கையாக வெளியேறி, தன்னைப் போன்ற விடுதலைத் தாகம் கொண்டவர்கள் அனைவரையும் அணி சேர்த்து விடுதலைப் படை அணி கட்டியவர் வீரமங்கை வேலுநாச்சியார்.  பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்குப் பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் வேலு நாச்சியார்.  தனது உடையில் நெருப்பை வைத்துக் கொண்டு பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் தாக்குதல் நடத்தியவர் குயிலி.

சின்னமருதுவும், பெரிய மருதுவும் பீரங்கிகளுக்கு முன்பு வளரியால் வாகை சூடியவர்கள். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என்று சொல்லி மறைந்து, இன்றும் வரலாற்றில் பெரும் மலையாக வாழ்பவர் தீரன் சின்னமலை.  அந்த மாவீரன் தூக்குமேடைக்கு சென்ற ஆண்டு 1805.  அவரது போர்ப்படையிலும் ஒற்றர்படையிலும் செயல்பட்ட தளபதி பொல்லான் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1806-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு பயம் என்றால் என்னவென்று காட்டப்பட்டது.  1857 சிப்பாய் புரட்சியைத்தான் முதலாவது இந்திய விடுதலைப் போர் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் தெற்கில், அதுவும் தமிழகத்தில்  நடந்தவைதான் இவை. அடிமைப்படுத்துதல் என்று தொடங்கியதோ, அன்றைய நாளே விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண், நம்முடைய தமிழ் மண்.  இருநூறு ஆண்டுகள் ஆடு போல் வாழ்வதைவிட இரண்டே நாட்கள் புலியாக வாழ்வது மேல் என்று சொன்ன திப்பு சுல்தானின் தீரம் கொண்ட படைவீரர்களைக் கொண்டிருந்த மண், நம்முடைய தமிழ் மண். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து