முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் நீர் திறப்பு: மதுரை வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் நீரில் மூழ்கிய யானைக்கல் தரைப்பாலம்

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2022      தமிழகம்
vaigai-river---2022-09-01

Source: provided

மதுரை: கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மதுரை யானைக்கல் தரைப்பாலம் மற்றும் இணைப்பு சாலைகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை, பொம்மராஜபுரம், போடி, உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் காலை முதல் படிப்படியாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் காலையில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணி அளவில் 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் ஏற்கனவே 70 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வந்த நீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையின் பிரதான 7 மதகுகள் வழியாகவும், 7 சிறிய மதகுகள் வழியாகவும் தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.

நேற்று காலை நிலவரப்படி வைகையாற்றில் 4,300 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால், வைகை அணை முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.  7 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் மதுரை தென்கரை வடகரையில் உள்ள சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. யானைக்கல் தரைப்பாலம், இணைப்பு சாலைகள் தண்ணீரில் மூழ்கின. இதையொட்டி பாதுகாப்பு கருதி அந்த தரைப்பாலம் மூடப்பட்டது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணையில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து