முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டிக்கு பின்னால் கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது: ஜல்லிக்கட்டை ஒருமுறை நேரில் பார்க்க வாருங்கள்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      இந்தியா
jallikattu-2022-12-01

ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னால் கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது என்று தங்கள் தரப்பு வாதத்தை தெரிவித்த தமிழக அரசு, ஜல்லிக்கட்டை ஒருமுறை நேரில் பார்க்க வாருங்கள் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது. முன்னதாக இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை எடுத்துக் கூறினார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட அரசியல் சாசன அமர்வு எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாகத் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை கடந்த 23.11.2022 அன்று தாக்கல் செய்தது. அதில், ''ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படவில்லை. மிகவும் பாதுகாப்பான முறையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. பாரம்பரிய விளையாட்டுக்குத் தடை விதித்தால் தமிழ் கலாச்சாரம் அழியும் நிலைக்குத் தள்ளப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றும் வகையில் காலங்காலமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. விலங்குகள் வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கூடாது” என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்ற வாதத்தை வைத்த தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பொழுதுபோக்கு போட்டி இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னால் காளைகளின் இனவிருத்தி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமுறை தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வேண்டும். 18 மாதம் முதல் ஆறு வயது உடைய காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். அதன் பின்னர் அதனை வீட்டில் வளர்ப்பார்கள். வெளிநாட்டில் இருப்பது போன்று காளை மாடுகளைக் கொல்லும் வழக்கம் இங்கே கிடையாது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. அதை துன்புறுத்தல் என்று கூற முடியாது.' என வாதத்தை எடுத்து வைத்தனர். 

அதற்கு நீதிபதிகள், 'ஜல்லிக்கட்டில் காளையை அவிழ்த்து விடப்படும்போது அதனை அடக்க பலர் பாய்கிறார்களே?' எனக் கேள்வி எழுப்பினர்.

'பலர் பாய்ந்தாலும் ஒருவர் காளையின் திமிலைப் பிடித்தவுடன் மற்றவர்கள் விட்டு விடுவார்கள். ஒருவர் மட்டுமே காளையைப் பிடிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக மைக்கில் அறிவித்துக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை ஒரு காளையைப் பிடிக்க ஒருவருக்கு மேல் பலர் முற்பட்டால் அந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இது காலம் காலமாக எழுதப்படாத விதி. அது கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது' என தமிழக அரசு தனது பதிலை தெரிவித்தது. 'ஒருவர் மட்டுமே காளையைப் பிடிப்பார்கள் என எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து