முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் முக்கிய நகரங்களில் 4 வங்கிகள் டிஜிட்டல் ரூபாயை வெளியிட்டன

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      வர்த்தகம்
Digital-Rupee-2022-12-01

நாட்டின் முக்கிய நகரங்களில் முதல் கட்டமாக ஸ்டேட் பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. ஆகிய 4 வங்கிகள் இந்த டிஜிட்டல் ரூபாயை வெளியிட்டு உள்ளது. 

இந்தியாவில் தற்போது நாணயங்கள் மற்றும் காகித வடிவத்தில் பணம் புழக்கத்தில் உள்ளது. மாறி வரும் நவீன யுகத்தில் கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்து வருகிறது. மெய்நிகர் நாணயம் என்று அழைக்கப்படும் இந்த கிரிப்டோகரன்சி இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திகழ்கிறது.

நைஜீரியா, ஜமைக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் ஏற்கனவே டிஜிட்டல் கரன்சி புழக்கத்தில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இதனை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023ம் ஆண்டு பட்ஜெட்டின்போது ரிசர்வ் வங்கி ஆதரவுடன் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தபடும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி சில்லரை வர்த்தகத்தில் சோதனை அடிப்படையில் டெல்லி, மும்பை, பெங்களூர், புவனேசுவர் ஆகிய 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் நேற்று வெளியானது. முதல் கட்டமாக ஸ்டேட் பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. ஆகிய 4 வங்கிகள் இந்த டிஜிட்டல் ரூபாயை வெளியிட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக பரோடா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி. மற்றும் கோட்டக் மகேந்திரா ஆகிய வங்கிகள் டிஜிட்டல் ரூபாயை வெளியிட உள்ளன.

டிஜிட்டல் நாணயமான இ-ரூபாய் இரண்டு வடிவமைப்பை கொண்டது. முதலாவது டோக்கன் அடிப்படையிலும் 2-வது கணக்கு அடிப்படையிலும் இருக்கும்.  டோக்கன் முறையிலான டிஜிட்டல் நாணயம் என்பது வங்கியின் ரூபாய் நோட்டு போன்றது. இந்த டோக்கனை வைத்து இருப்பவர்கள் அதன் மதிப்புக்கு உரிமையாளராக இருப்பார்கள். கணக்கு முறையிலான அமைப்பில் டிஜிட்டல் ரூபாய் வைத்து இருப்பவர்கள் இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்து இருக்க வேண்டும். குறிப்பிட்ட வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மட்டுமே தற்போது இதனை பயன்படுத்த முடியும். மொபைல் செயலி மூலம் 'இ வால்ட்' உருவாக்கி டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தலாம்.

வெளிநாடுகளில் பணிபுரிந்து டிஜிட்டல் பணமாக சம்பளம் பெறுபவர்கள் இதன் மூலமாக குறைந்த கட்டணத்தில் தங்களது உறவினர்கள் மற்றும் மற்ற நாடுகளில் வசிப்பவர்களுக்கு பணத்தை அனுப்பலாம். அரசின் பங்கு பத்திரங்களுக்கும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். பரீட்சார்த்த முறையில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் ரூபாய் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் சில்லரை வர்த்தக பண பரிமாற்றத்தில் புதிய புரட்சி ஏற்படும்.

ஏற்கனவே பெட்டிகடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை டிஜிட்டல் முறையிலான பணபரிமாற்றத்திற்கு மாறிவிட்டதால் நேற்று வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டல் ரூபாய் பரிமாற்றமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நிதி பரிமாற்றத்திற்காக மோசடி ஆபத்து இல்லாத மெய்நிகர் ரூபாயாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து