முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியாவில் பயங்கரம்: மேயர் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      உலகம்
Somalia 2023 01 24

Source: provided

மொகாதி ; சோமாலியாவில் மேயர் அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

இந்த நிலையில் மொகாதிசுவில் உள்ள மேயர் அலுவலகம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் மேயர் அலுவலகத்தின் தடுப்பு சுவரை பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். அதன் பின்னர் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதற்கிடையில் இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த ராணுவ வீரர்கள் மேயர் அலுவலகத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்கு கொண்டு வந்தனர்.

அதை தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சோமாலியாவின் கல்கட் நகரில் உள்ள ராணுவ முகாமுக்குள் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 11 வீரர்கள் உயிரிழந்ததும், அதற்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து