முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ்க தமிழ்நாடு; வாழ்க பாரதம்’: குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களிடம் கவர்னர் ரவி உரை

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      தமிழகம்
RN-Ravi 2023 01 26

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை காலை காணொலி காட்சி மூலம் மக்களிடம் உரையாற்றினார்.

நாடு முழுவதும் 74-வது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விழாவில் பங்கேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை கொடியேற்றினார். அதற்கு முன்னதாக காணொலி காட்சி மூலம் மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் பேசியதாவது:

பாரதத்தின் 74வது ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கும் எனது உளப்பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில், அற்புதமான அறிவாற்றல் மற்றும் அசாதாரண தொலைநோக்குடனும் காலத்தை வென்ற அரசியலமைப்பை வழங்கிய பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அந்த அரசியலமைப்பு தான் ஒரு வலுவான பன்முக ஜனநாயகமாக இந்தியா வளர உதவியது.

இந்நாளில் சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மற்றும் சொல்ல முடியாத சித்ரவதைகளை அனுபவித்த துணிச்சலான வீர மகன்கள் மற்றும் மகள்களை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதி, வீரமங்கை ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா, மாவீரன் அழகுமுத்து கோன், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை ஆகியோருக்கு நெஞ்சார்ந்த மரியாதையை செலுத்துவோம்.

தீரன் சின்னமலை, புலி தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வி.வி.எஸ். அய்யர், சிங்காரவேலர், ருக்மணி லட்சுமிபதி, தில்லையாடி வள்ளியம்மை, குயிலி, சுந்தர சாஸ்திரி சத்தியமூர்த்தி, அஞ்சலை அம்மாள் மற்றும் சுதந்திரத்துக்காக தங்களால் இயன்ற அனைத்தையும் வழங்கிய பலருக்கும் மரியாதை செலுத்துவோம். இந்நாளில் நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம். பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவர்களின் தியாகங்களுக்காக தேசம் எப்போதும் பெருமிதம் கொள்ளும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது என்றும், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து