முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வலைதளம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      தமிழகம்
CM-2 2023 01 27

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் மு.க .ஸ்டாலின் நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக ஐந்து நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கினார். மேலும், தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக  உருவாக்கப்பட்டுள்ள  வலைதளத்தையும் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் துறைகளில் உள்ள புத்தொழில் மற்றும் தொழில் துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. 

இந்நிதியிலிருந்து, வளர்ந்து வரும் துறைகளான மேம்பட்ட உற்பத்தி, எந்திரவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம், டிஜிட்டல்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, உயிர் தொழில்நுட்பம், வெப் 3.0., ஆழமான தொழில்நுட்பம், காலநிலை தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படும்.  இந்த நிதியமானது, தமிழ்நாடு அரசின் நிதித்துறை மற்றும் தொழில் துறையின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிதியத்தில் தமிழ்நாடு அரசு 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.  மேலும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் டைடெல் பூங்கா  ஆகியவை 50 கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி செய்துள்ளது. தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியமானது, அதன் நிதியை 2023-24 ஆம் நிதியாண்டில் 500 கோடி ரூபாயாக உயர்த்த  திட்டமிட்டுள்ளது.  

தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தின் மூலமாக நிறுவனங்களுக்கு முதலீடுகள் வழங்கிட விளம்பரங்களின்  மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தன்னாட்சி முதலீட்டுக் குழுவால் முதல் 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு முதலீடு அனுமதி கடிதங்களை முதல்வர் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக  உருவாக்கப்பட்டுள்ள  “Companies Compliances and Financials Monitoring System” www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் / தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர்  அருண்ராய், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து