முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவா, டெல்லி, மும்பைக்கான விமான கட்டணம் உயர்வு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      தமிழகம்
Air-India 2023 01 20

Source: provided

ஆலந்தூர் : கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவா, டெல்லி, மும்பைக்கு விமான கட்டணம் உயர்ந்துள்ளது.

கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு சகஜநிலை திரும்பி உள்ளதால் விமான சேவைகளும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளன. சுற்றுலா, வெளிநாடு செல்வோர், சொந்த ஊருக்கு செல்வோர் என உள்நாட்டு, வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் கோடை விடுமுறையையொட்டி வருகிற ஏப்ரல், மே மாதங்களில் வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான பயணிகள் திட்டமிட்டு வருகிறார்கள். சுற்றுலா செல்வோர் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்வோர் தங்களுடைய விமான டிக்கெட்டுகளை இப்போதே முன் பதிவு செய்து வருகின்றனர்.

இதனால் கோடை விடுமுறையைெயாட்டி ஏப்ரல், மே மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகள் பாதிக்கு மேற்பட்டவை விற்று தீர்ந்து விட்டது. குறிப்பாக ஒரு குழுவாக செல்வோர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துவிட்டனர். இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது.

வருகிற ஏப்ரல், மே மாதத்தில் சென்னையில் இருந்து கோவா செல்வதற்கு ரூ.4,500 முதல் ரூ.6 ஆயிரம் வரை விமான கட்டணம் உயர்ந்து உள்ளது. டெல்லிக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம், மதுரைக்கு ரூ.3500 - 4500, துபாயில் இருந்து சென்னைக்கு வர ரூ.25ஆயிரம் முதல் ரூ.35ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. வழக்கமாக துபாய்- சென்னை விமான கட்டணம் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் இருக்கும். மும்பை விமான கட்டணமும் அதிகரித்து உள்ளது.

இது குறித்து டிராவல்ஸ் ஏஜென்சியை சேர்ந்தவர்கள் கூறும்போது, பொதுவாகவே ஏப்ரல் மாதத்தில் தமிழ் வருட பிறப்பின் போது விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்வது வழக்கம் .தற்போது இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை தமிழ் வருட பிறப்பு வருவதினால் வார விடுமுறை சேர்த்து சொந்த ஊர், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . இதனால் வெளிநாடு மற்றும் கோவா,டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது.

விமான பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து விமான நிறுவனங்கள் கோடை விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை விடுமுறைகளை கணக்கில் கொண்டு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இது பயணிகளுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்தாலும் அது பயணிகளை வெகுவாகவே பாதிக்கும். இருந்தாலும் கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்வோர் விமான சேவையே நம்பி உள்ளனர். இதனால் அதிக கட்டணத்தை செலுத்தி செல்கின்றனர் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து