முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது : பிப்ரவரி 7-ம் தேதி தேரோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      ஆன்மிகம்
Palani 2023 01 29

Source: provided

பழனி : முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பழனி அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடந்த ராஜகோபுரம், தங்ககோபுரம் மற்றும் உப சன்னதிகளில் வழிபட்டு சென்றனர். 

பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூச திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவிற்காக மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருது நகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வருகை தருவார்கள். கும்பாபிஷேக நிகழ்ச்சியால் பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் பழனி நோக்கி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

 தைப்பூச திருவிழா நேற்று  காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கிழக்கு ரதவீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். 

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4-ம் தேதி நடக்கிறது. அன்றுகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்த நிகழ்ச்சியும், மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம், தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். 

பிப்ரவரி 5-ம் தேதி திருக்கல்யாணமும், அன்று இரவு சாமி வீதிஉலாவும் நடைபெறும். பிப்ரவரி 7-ம் தேதி தெப்பத்தேர் உற்வசத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 

தைப்பூசத்தையெட்டி பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பழனிக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மேலும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து