முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியை எதிர்கொள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் தயாராக உள்ளனர் : ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      விளையாட்டு
Bad-Cummins 2023 02 05

Source: provided

பெங்களூரு : இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூரில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய 3 டெஸ்ட் போட்டி தொடர்களையும் இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி இருக்கிறது. 

இதனால் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கேப்டன் கம்மின்ஸ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- 

"முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு சிறப்பு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவோமா? என்று கேட்கிறீர்கள். அது குறித்து இப்போது உறுதியாக சொல்ல முடியாது. நாக்பூர் சென்று ஆடுகளத்தை ஆய்வு செய்த பிறகு சூழ்நிலைக்கு தகுந்தபடி எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடுவது என்பது முடிவு செய்யப்படும்.

சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து அதிகம் பேசும் நீங்கள் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லாவிதமான சூழலிலும் சிறப்பாக செயல்பட்டு இருப்பதை மறந்து விடக்கூடாது. சிட்னி போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களிலும் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய விக்கெட்டை வீழ்த்தி இருக்கின்றனர். 

சுழற்பந்து வீச்சில் எங்களிடம் நிறைய பந்து வீச்சு வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் அணியில் வெவ்வேறு விதமாக பந்து வீசும் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு ஆதரவு அளிக்க ஆஷ்டன் அகர், ஸ்வெப்சன், மர்பி உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் தயாராக இருக்கின்றனர். டிராவிஸ் ஹெட்டும் சுழற்பந்து வீசக்கூடியவர். எத்தகைய பந்து வீச்சு கூட்டணியை உருவாக்கினால் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று தோன்றுகிறதோ அதற்கு தகுந்தபடி பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெறுவார்கள். ஆனால் அதனை எப்படி பிரிப்போம் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து