முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை வெல்வது மிகப்பெரியது: ஸ்மித்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      விளையாட்டு
Steve-Smith 2023 02 07

Source: provided

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - காவஸ்கர் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது. 4 டெஸ்ட், 3 ஒரு நாள் ஆட்டங்கள் அடங்கிய இந்தத் தொடர்களில், டெஸ்ட் எப்போதுமே முக்கியமான ஒன்று.  இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் கடுமையான போட்டி என்றால் அது ஆஷஸ் தொடர்தான். அதேபோல் ஆஸி.க்கு இந்தியாவின் பார்டர் கவாஸ்கர் கோப்பை முக்கியமானது. ஏனெனில் இந்தியா ஆஸி.வை இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பிப். 9ஆம் தேதி நடைபெறும் இந்தப் போட்டிக்கு சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் 15,901 ரன்களை கடந்துள்ளார். 30 சதங்களும் 4 இரட்டை சதங்களும் அடித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் இது குறித்து கூறியதாவது:  இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது மலையை சாய்ப்பது போல கடினமானது. ஸ்பின் அதிகமாக இருக்கும் இந்திய மண்ணில் இந்தியாவை டெஸ்டில்  வீழ்த்துவது என்பது ஆஷஸ் தொடரை வெல்வதை விடப் பெரியது. 

________________

ஓய்வை அறிவித்த ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச்

2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஃபிஞ்ச், அந்த வருடத்துக்குப் பிறகு எந்தவொரு டெஸ்டிலும் விளையாடவில்லை. எனினும் ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக உள்ளார். ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி, கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். டி20யில் 3120 ரன்களை எடுத்துள்ளார். 

142.5 ஸ்டிரைக்ரேட்டுடன் விளையாடக் கூடியவர். தற்போது டி20 தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ஃபிஞ்ச் கூறியதாவது: என்னால் அடுத்த (2024) டி20 உலகக் கோப்பை வரை விளையாட முடியாது எனத் தெரியும். இதுதான் ஓய்வை அறிவிக்க சரியான நேரம். கேப்டனாக இருக்கும்போது 2012ஆம் ஆண்டு முதன்முறையாக டி20 உலகக் கோப்பை வெல்லும்போதும், 2015இல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதும் என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சிகள் என்பேன். 

________________

தேசிய டேபிள் டென்னிஸ்: சென்னையில் நேற்று துவக்கம்

யுடிடி 84-வது மாநிலங்களுக்கு இடையிலான யு-17, யு-19 தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று (8-ம் தேதி) தொடங்குகிறது. அணிகள் பிரிவு, தனிநபர், இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் இருந்து அணிகள் பிரிவில் 16 பேரும், சிறுவர் பிரிவில் 15 பேர், சிறுமியர் பிரிவில் 15 பேர் கலந்துகொள்கின்றனர். இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.6.6 லட்சம் ஆகும். இரு பாலருக்கான யு-19 பிரிவில் சாம்பியன் பட்டம்வெல்பவருக்கு தலா ரூ.72 ஆயிரம்மற்றும் பதக்கம் பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.36 ஆயிரமும், அரை இறுதியில் தோல்வி அடைபவர்களுக்கு ரூ.19 ஆயிரமும், கால் இறுதி சுற்றுடன் வெளியேறுபவர்களுக்கு ரூ.8 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

அதேவேளையில் இரு பாலருக்கான யு-17 பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு தலா ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இத்தகவலை தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் டி.தேவநாதன், செயலாளார் ஏ.வி.வித்யாசாகர், துணை தலைவர் முரளிதர ராவ், போட்டி ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

________________

விராட் கோலி போட்ட டுவிட்

கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக ட்விட்டரில் பகிர்ந்தார். பாக்ஸை திறந்துகூட பார்க்காத நிலையில் தனது போன் தொலைத்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதில் அளித்த ஜொமெட்டோ உங்கள் புதிய தொலைபேசி காணாமல் போன சோகம் மறக்க ஐஸ் கீரிம் ஆர்டர் செய்து பாருங்கள் என பதிவிட்டது. இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. இந்த டுவிட் பல எதிர்வினைகளைத் தூண்டியது. சிலர் அக்கறை காட்டினாலும், மற்றவர்கள் இது ஒரு விளம்பர வித்தையாக இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

________________

பாகிஸ்தான் சொல்வதை செய்யாது: ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு

6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அவர் கூறினார்.

________________

தந்தையின் சாதனையை சமன் செய்த சந்தர்பால்

ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் மழை பாதிப்புக்கு இடையே பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 116 ரன்களுடனும், தேஜ்நரின் சந்தர்பால் 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த பிராத்வெய்ட்-தேஜ்நரின், தொடக்க விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜோடி என்ற சிறப்பை பெற்றனர். இந்த கூட்டணி ஸ்கோர் 336-ஐ எட்டிய போது உடைந்தது. பிராத்வெய்ட் 182 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் அபாரமாக ஆடிய தேஜ்நரின் சிக்சர் அடித்து தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். 

முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய 10-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 447 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தேஜ்நரின் 207 ரன்களுடன் (467 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இவரது தந்தை ஷிவ் நரின் சந்தர்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 203 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த ஸ்கோரை தனது 3-வது டெஸ்டிலேயே கடந்து அசத்தியிருக்கிறார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து