முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைப்பு: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Budget-10 2023 03 20

தி.மு.க. அரசு பதவியேற்கும்போது சுமார் 62 ஆயிரம் கோடி ரூபாய் இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பாண்டில், திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைத்துள்ளோம். இது கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-20 ஆண்டு பற்றாக்குறையோடு ஒப்பிட்டாலும் ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது" என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று காலை தாக்கல் செய்தார். இது தி.மு.க. அரசின் 2வது முழுமையான பட்ஜெட்.  அவரது உரையில், "வரலாறு காணாத பணவீக்கம், உக்ரைனில் தொடரும் போர், உலகப் பொருளாதாரத்திலும் நிதிச் சந்தைகளிலும் நிலவும் நிச்சயமற்ற சூழல் போன்ற பல சவால்களையும் வரும் நிதியாண்டில் எதிர்நோக்கி உள்ளோம். தேசிய அளவோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், நம் மாநிலத்தில் கடந்தாண்டு, அதிக பொருளாதார வளர்ச்சியை எய்தி உள்ளதோடு வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறையையும், ஒன்றிய அரசைவிட கணிசமாக குறைத்துள்ளோம். இது முதல்வரின் தலைமைப் பண்பிற்கும், திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிக செலவுள்ள பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும்போதிலும், முன்னெப்போதும் இல்லாத அளவில், பல கடினமாக சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு நாங்கள் பதவியேற்கும்போது சுமார் 62 ஆயிரம் கோடி ரூபாய் இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பாண்டில், திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைத்துள்ளோம். இது கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-20 ஆண்டு பற்றாக்குறையோடு ஒப்பிட்டாலும் ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாய் பற்றாக்குறையை அறவே அகற்ற வேண்டும் என்ற நிதி பொறுப்புடைமை சட்டத்தின் இலக்கை எட்ட, அரசின் சமூக நலத்திட்டங்களுக்கும், வளர்ச்சி முன்னுரிமைகளுக்கும் எவ்வித பாதிப்புமின்றி, வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்படும்.

இந்த அரசு பதவியேற்றபோது சந்தித்த நிதி நெருக்கடியைச் சந்திக்க முக்கியக் காரணம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வரி வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியே ஆகும். 2006-2011 வரை, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், சராசரியாக 8 சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய், அடுத்த பத்தாண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சிக் கண்டு 2020-21ம் ஆண்டு வெறும் 5.58 சதவீதமாக குறைந்தது.

மகராஷ்டிரா உள்ளிட்ட அதிக தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் இந்த விகிதம் குறைவாகவே உள்ளது. தமிழக அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக இந்த விகிதம் 6.11 தற்போது உயர்ந்துள்ளபோதிலும், இதனை மேலும் உயர்த்தி நலத்திட்டங்களுக்கான வருவாய் ஆதாரங்களை ஈட்டிட முனைப்போடு செயல்படுவோம்" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து